வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்தவேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸ்அப்பில் 'விக்சித் பாரத்' செய்திகளை அனுப்புவதை நிறுத்துமாறு மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு(MeitY) அனுப்பிய உத்தரவில்,"தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலில் உள்ளது. எனவே 'Viksit Bharat' செய்திகளை வாட்ஸ்அப்பில் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. அதோடு, இந்த விவகாரத்தில் அமைச்சகத்திடமிருந்து இணக்க அறிக்கையை கோரியுள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் அறிவிப்பு மற்றும் எம்சிசி அமலுக்கு வந்த போதிலும், மத்திய அரசின் முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் 'விக்சித் பாரத் சம்பார்க்' கீழ் அனுப்பப்பட்ட செய்திகள், குடிமக்களின் தொலைபேசிகளில் விநியோகிக்கப்படுவதாக பல புகார்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பதில்
இதற்கு பதிலளிக்கும் விதமாக, MCC நடைமுறைக்கு வருவதற்கு முன்பே செய்திகள் அனுப்பப்பட்டிருந்தாலும், அவற்றில் சில முறையான மற்றும் நெட்வொர்க் வரம்புகள் காரணமாக தாமதத்துடன் பெறுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று MeitY தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தது. இந்த நடவடிக்கை, வரவிருக்கும் தேசிய தேர்தல்களில் சமநிலையை உறுதி செய்வதற்காக ECI எடுத்த முடிவுகளின் ஒரு பகுதியாகும் என்று ஆணையம் பதிலுக்கு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு எம்சிசி அமலுக்கு வந்தது. மார்ச் 16ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்