ரயில் நிலையக் குடிநீரில் ஆபத்தான 'ஈ-கோலை' பாக்டீரியா: அதிர்ச்சிளிக்கும் CAG அறிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்திய ரயில்வேயின் பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் பயணியருக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் குளிரூட்டப்பட்ட குடிநீரில் ஆபத்தான E. Coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (CAG) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. இந்திய ரயில்வேயின் புறநகர் அல்லாத 512 ரயில் நிலையங்களில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரம் குறித்து சி.ஏ.ஜி குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. 2022-23 ஆம் ஆண்டில் 8 மண்டலங்களைச் சேர்ந்த 49 நிலையங்களிலும், 2023-24 ஆம் ஆண்டில் 9 மண்டலங்களைச் சேர்ந்த 56 நிலையங்களிலும் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் பெருமளவிலான குடிநீர் மாதிரிகளில் 'ஈ-கோலை' உள்ளிட்ட கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ரயில் நிலையங்கள்
'ஈ-கோலை' கண்டறியப்பட்ட முக்கிய ரயில் நிலையங்கள்
1. தெற்கு ரயில்வே: கோவை சந்திப்பு, பாலக்காடு சந்திப்பு
2. மத்திய ரயில்வே: மும்பை சி.எஸ்.எம்.டி (CSMT), பிவாண்டி ரோடு, கல்யாண், லோனாவாலா
3. தென் மத்திய ரயில்வே: ஹைதராபாத்
4. கிழக்கு ரயில்வே: மதுபூர் (ஜார்க்கண்ட்)
மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலப்பதன் மூலமே பொதுவாகத் தண்ணீரில் 'ஈ-கோலை' பாக்டீரியா உருவாகும்.
இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட நீரைக் குடிக்கும் போது பயணியருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, உணவு நச்சாதல் மற்றும் அரிதான சூழல்களில் சிறுநீரக செயலிழப்பு வரை ஏற்படக்கூடும்.
சுகாதாரம்
சுகாதாரக் குறைபாடுகள்
மேலும், 89%-க்கும் அதிகமான ரயில் நிலையங்களில் போதிய அளவிலான கழிப்பறைகள், சுத்தமான குடிநீர் குழாய்கள், போதுமான குப்பைத் தொட்டிகள் மற்றும் காத்திருப்போர் கூடம் போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட நிர்ணயிக்கப்பட்ட அளவில் இல்லை என்றும் சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து குடிநீர் விநியோக முறைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்யவும், குளோரின் அளவைப் பரிசோதித்துத் தரமான குடிநீரை உறுதியளிக்கவும் ரயில்வே நிர்வாகத்திற்கு சி.ஏ.ஜி பரிந்துரைத்துள்ளது.