துவாரகா பிரபாகரன் காணொளி சர்ச்சை - உண்மை தன்மையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்
விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரன் கடந்த 2009ம்.,ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டு போர் களத்தில் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியானது. அவருடன் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் 2 மகன்கள் உள்ளிட்டோரும் உயிரிழந்ததாக இலங்கை ராணுவம் உறுதி செய்தது. இந்நிலையில் கடந்த 27ம்.,தேதி பிரபாகரன் மகள் துவாரகா என்று கூறி பெண் ஒருவர் காணொளி காட்சி மூலம் தோன்றி உரையாற்றியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனிடையே அண்மைக்காலமாக AI என கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு மற்றவர்கள் உருவத்தை வேறு ஒருவர் அப்படியே பிரதிபலிக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதுவும் அப்படிப்பட்ட ஓர் பதிவாக தான் இருக்கக்கூடும் என்னும் கருத்துகள் தற்போது எழுந்துள்ளது.
'பிரபாகரன் விரைவில் வெளியில் வருவார்' - பிரபாகரன் ஆதரவாளர்கள்
இவ்விவகாரம் குறித்து சைபர்-க்ரைம் தடுப்பு நிபுணரான ராஜேந்திரன், "இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு அதாவது 'டீப்ஃபேக்' தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்படும் வீடியோக்கள் போலியானதா இல்லையா?என்பதை கண்டறிவது சற்று கடினம்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், 'இந்த துவாரகா காணொளி விவகாரத்தில் குறிப்பிட்ட துறையினை சார்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இக்காணொளியை உண்மை என்று நம்பி 'பிரபாகரன் விரைவில் வெளியில் வருவார்' என்று அவரது ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் மறுபுறம் சில தமிழர் அமைப்புகள் மற்றும் விடுதலை புலிகளின் ஒரு பிரிவினரும் இந்த காணொளிப்பதிவு போலி எனக்கூறி வருகிறார்கள். அதன்படி இதன் உண்மைத்தன்மையினை ஆராய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகிறார்கள்.