ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
செய்தி முன்னோட்டம்
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்துறையில் கட்டிடங்கள் கட்டுதல், கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளுக்கான டெண்டர்களில் சுமார் 1,020 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை முதற்கட்ட புகார் அளித்திருந்தது. ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5 முதல் 10 சதவீதம் வரையிலும், பணி ஒதுக்கீட்டிற்கு 20 முதல் 25 சதவீதம் வரையிலும் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
சோதனை
சென்னை மற்றும் திருச்சியில் தீவிரச் சோதனை
இப்புகாரின் பேரில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கே.என். நேருவுக்கு தொடர்புடைய 30 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 241 முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.
திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள கே.என். நேருவின் இல்லத்தில் அதிகாலை 15-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
திருச்சியிலுள்ள வீடு மட்டுமன்றி, சென்னையில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களிலும் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் நடத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்துறை நியமன முறைகேடு வழக்கை மறு ஆய்வு செய்யக் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்த நிலையில், இச்சோதனை முடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.