கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம்
ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு 2 மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளியில் 20 பெஞ்சுகள் அமைக்கப்பட்டு, இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் 2 மாத கோடை விடுமுறையை அடிக்கடி பலர் விமர்சிப்பது உண்டு. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நாங்கள் நீதிமன்றத்தில் பார்க்கிறார்கள். ஆனால், அது எங்கள் வேலையின் ஒரு பகுதி மட்டுமே." என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு உச்ச நீதிமன்ற நீதிபதியும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்கிறார்கள்
"ஆனால், அது எங்கள் வேலையின் ஒரு பகுதி மட்டுமே. நாங்கள் தினமும் 40-50 வழக்குகளை எடுத்து கொள்வதால் அதை பற்றி படிக்க வேண்டிய கட்டமும் எங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு நீதிபதியும் அடுத்த நாளுக்குத் திட்டமிடப்பட்ட வழக்குக் கோப்புகளைப் படிக்க சமமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். தீர்ப்புகள் மட்டுமே வேலை நாட்களில் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில், ஒவ்வொரு நீதிபதியும் அமர்ந்து தீர்ப்புகளை ஆணையிடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில், நாங்கள் அனைவரும் திங்கள்கிழமைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளைப் படிக்கிறோம். எனவே , விதிவிலக்கு இல்லாமல், ஒவ்வொரு உச்ச நீதிமன்ற நீதிபதியும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்கிறார்கள்." என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.