ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த போதை நபர் - கண்டுகொள்ளாத விமான ஊழியர்கள்
கடந்த நவம்பர் 26ம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்தது. இந்த விமானத்தில் முதல் வகுப்பில் உணவிற்கு பிறகு பயணிகள் தூங்க ஏதுவாக விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது போதையில் இருந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்திருந்த பெண் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதில் அவரது ஆடை, ஷூ, பை போன்றவைகள் நனைந்துள்ளது. பின்னரும் அந்த போதை நபர் அங்கிருந்து நகராமல் ஆபாசமாக நின்றபடி இருந்துள்ளார், பின்னால் வந்து ஒரு நபர் அவரை நகர சொல்லவே, அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார். இது குறித்து பாதிப்படைந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விமான ஊழியர்கள்-டாடா குழும தலைவருக்கு கடிதம் எழுதிய பாதிக்கப்பட்ட பெண்
ஆனால் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த பெண்ணிற்கு மாற்று உடையும், ஷூவும் கொடுத்து மாற்று இருக்கையில் அமர வைத்துள்ளார்கள். டெல்லி வந்ததும் அந்த நபர் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் கிளம்பி சென்றுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரனுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இதன் பிறகே, ஏர் இந்தியா இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா வட்டாரங்கள், "விமானத்தில் நடந்தது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போதை நபர் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசு பரிசீலனையில் உள்ளதால், அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.