LOADING...
இந்திய வான்வெளியில் புதிய கவசம்! 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சோதனை வெற்றி
'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய வான்வெளியில் புதிய கவசம்! 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சோதனை வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Dec 24, 2025
01:48 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தச் சோதனையின் போது, அதிவேகமாக வந்த பல்வேறு இலக்குகளை ஆகாஷ்-என்ஜி ஏவுகணை துல்லியமாக இடைமறித்து அழித்தது. மிகக் குறைந்த உயரத்தில் பறந்து வரும் இலக்குகள் மற்றும் அதிக உயரத்தில் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகள் என அனைத்துச் சூழல்களிலும் இந்த ஏவுகணை தனது திறனை நிரூபித்துள்ளது. இதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை தேடு கருவி (RF Seeker) மற்றும் சக்திவாய்ந்த 'சாலிட் ராக்கெட் மோட்டார்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கியத்துவம்

இந்த சோதனையின் முக்கியத்துவம் என்ன?

எதிரி நாடுகளின் போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானிலேயே அழிக்கும் திறன் கொண்டது. இது இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசத்தை (Air Defence Shield) பலமடங்கு பலப்படுத்தும். பழைய ஆகாஷ் ஏவுகணைகளை விட இது அதிக வேகத்துடனும், விரைவாக செயல்படும் தன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால், விரைவில் இது இந்திய இராணுவம் மற்றும் விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்காக DRDO விஞ்ஞானிகள், இந்திய விமானப்படை மற்றும் இத்திட்டத்தில் பங்கேற்ற இந்தியத் தொழில் கூட்டாளிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 'ஆத்மநிர்பர் பாரத்' (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் விண்வெளி பாதுகாப்பில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement