கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
தமிழ்நாடு மாநில மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று(ஜூன்.,13) காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட 17 மணிநேரம், நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருக்கு பாதி வழியிலேயே நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான மருத்துவ அறிக்கை
இந்நிலையில், ESI மருத்துவர்களும், AIIMS மருத்துவர்களும் அவரின் உடல்நிலையை பரிசோதிக்க வரவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஆஞ்சியோ செய்த அறிக்கையினை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்திற்கு செல்லும் முக்கியமான ரத்தநாளங்களில் மூன்று அடைப்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து இன்று மாலையே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமைச்சரின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான விசாரணை இன்று மதியம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், இதற்காக வரும் 16 ஆம் தேதி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.