விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்
கடலூர் மாவட்ட விருத்தாசலத்தில் திமுக கவுன்சிலராக உள்ளவர் பக்கிரிசாமி. இவர் அந்த பகுதியில் நர்சரி பள்ளி ஒன்றினை நடத்தி வருகிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. தற்போது பக்கிரிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பக்கிரிசாமி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் திமுக'வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவினை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும்-மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் கூறியதாவது, எங்கள் அரசை பொறுத்தவரையில், நான் செய்தியை கேள்விப்படவில்லை, தொலைக்காட்சியில் தான் பார்த்தேன் என நான் சொல்ல மாட்டேன். இந்த செய்தி குறித்து அறிந்தவுடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன். சம்பந்தப்பட்டவரை அவர்களும் உடனடியாக கைது செய்து எனக்கு தகவல்களை அளித்தார்கள். இந்த அரசினை பொறுத்தவரை, குற்றச்செயல்களில் அதுவும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமான சின்னம் என கருதுகிறோம். அதன்படி இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எவ்வித பாராபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என்பதை உறுதியோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.