LOADING...
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: 27 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கீடு?
தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த சிக்கல்கள் இன்றுடன் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: 27 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கீடு?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
08:22 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் நான்கு பொது தேர்தல்களாக தொடர்ந்து வரும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த சிக்கல்கள் இன்றுடன் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் 39 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக தனது முந்தைய முடிவான 25 தொகுதிகளிலிருந்து ஓரடி முன்னேறி, தற்போது 27 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை வழங்க முன்வந்துள்ளது என தினமணி செய்தி கூறுகிறது. இதில் ஒரு மாநிலங்களவை இடம் இப்பொழுதும், மற்றொன்று 2028-ஆம் ஆண்டிலும் வழங்கப்படும் என திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

பேச்சுவார்த்தை

ப. சிதம்பரத்தின் வருகை

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் சில கருத்துகளால் திமுக தலைமை அதிருப்தியில் இருந்த நிலையில், நிலைமையை சீர்செய்ய மூத்த தலைவர் ப. சிதம்பரம் களமிறக்கப்பட்டார். நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய அவர், காங்கிரஸின் அகில இந்திய தலைமையின் கருத்துகளை முன்வைத்தார். இச்சந்திப்பின் போது திமுக எம்.பி. கனிமொழியும் உடனிருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில், பெரும்பாலானோர் திமுக கூட்டணியில் தொடர்வதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) இப்போதைக்கு கூட்டணி வைப்பது சரியாக இருக்காது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று இரவு 9 மணிக்குள் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Advertisement