விமானப் பயணிகளுக்குப் பெரிய நிவாரணம்: டிக்கெட் ரத்து, தேதி மாற்றத்திற்கு DGCA புதிய விதிகளை முன்மொழிவு!
செய்தி முன்னோட்டம்
விமான பயணச்சீட்டுகளை ரத்து செய்வதற்கும், பயணத் தேதிகளை மாற்றுவதற்கும் விதிக்கப்படும் கட்டணங்களால் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) ஒரு புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது. இது விமான பயணிகளுக்கு பல முக்கிய சலுகைகளை வழங்க உள்ளது. முன்மொழியப்பட்ட விதிகளின் படி, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட பிறகு, 48 மணி நேரத்திற்குள் பயணச்சீட்டை எந்தக் கட்டணமும் இல்லாமல் ரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ (தேதியை மாற்றுவது) விமான நிறுவனங்கள் ஒரு "Look-in" விருப்பத்தை வழங்க வேண்டும்.
முக்கிய அம்சங்கள்
புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள்
48 மணிநேரத்திற்குள் பயணிகள் புதிய பயண தேதிக்கான விமானக் கட்டணம் மாறுபட்டால், அதற்கான கட்டண வேறுபாட்டை மட்டுமே பயணி செலுத்த வேண்டும். மற்றபடி இந்த பயண மாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. விமானம் புறப்படுவதற்கு ஐந்து நாட்களுக்குள் (உள்நாட்டு விமானம்) அல்லது 15 நாட்களுக்குள் (சர்வதேச விமானம்) முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, இந்த 48 மணி நேரச் சலுகை பொருந்தாது. விமான பயண டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டாலும், பயணிகளுக்கு பணத்தைத் திரும்ப அளிக்கும் முழுப் பொறுப்பையும் விமான நிறுவனங்களே ஏற்க வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டதில் இருந்து 21 வேலை நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுத்தாக வேண்டும். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 7 நாட்களுக்குள் பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும்
பெயர் திருத்தம்
இலவசப் பெயர் திருத்தம்
முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் பெயரில் உள்ள எழுத்துப் பிழைகள் போன்ற சிறு பிழைகளைச் சுட்டிக்காட்டினால், எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் அதை விமான நிறுவனங்கள் திருத்தி வழங்க வேண்டும். மருத்துவ அவசரம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டை ரத்து செய்ய நேரிட்டால், விமான நிறுவனங்கள் பணத்தைத் திரும்ப அளிக்கலாம் அல்லது ரத்து செய்யப்பட்ட தொகையை எதிர்காலப் பயணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள உதவும் வகையில் Credit Shell-லை வழங்கலாம். DGCA வெளியிட்டுள்ள இந்த வரைவு விதிகள் குறித்து, பங்குதாரர்கள் நவம்பர் 30 வரை தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இந்த மாற்றங்கள் இறுதி செய்யப்பட்டால், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் வெளிப்படைத்தன்மையையும், பயணிகள் உரிமைகளையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.