திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் காயம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(நவ.,23) மகா ரதம் என்று கூறப்படும் அண்ணாமலையார் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது. அதன்படி முதலில் விநாயகர் தேர் பக்தர்களால் மாடவீதியில் இழுத்து செல்லப்பட்டது. 2வது வள்ளி-தெய்வானையுடனான முருகப்பெருமான் தேரோட்டம் என வரிசையாக நடைப்பெற்றது. இந்த திரு தேரோட்டத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலையில் ஒன்று கூடினர். பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்னும் காரணத்தினால் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்திருந்தது குறிப்பிடவேண்டியவை.
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
இந்நிலையில், 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை உடுப்பி உணவகம் அருகேயுள்ள தனியார் துணி கடை அருகில் நின்ற பக்தர்கள் சிலர் தேரினை இழுத்துள்ளனர். அப்போது தேரோட்டத்தையொட்டி போடப்பட்டிருந்த அலங்கார விளக்குகளில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரமானது கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது பாய்ந்துள்ளது. இதுகுறித்து அறிந்த காவல்துறை உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி பக்தர்களை மீட்டுள்ளனர். எனினும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.