வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் சனிக்கிழமை, நவம்பர் 23 உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றத்தாழ்வு பகுதி காரணமாக, நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கமாக, மீனவர்கள் ஆழ் கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Twitter Post
மற்ற மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு எப்படி?
ஏனைய மாவட்டங்களுக்கு குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 28ஆம் தேதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும். எனினும் சென்னை மற்றும் அதன் புறநகரங்களில், அடுத்த 48 மணி நேரத்தில், ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலை, மேலும் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டமும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நவ.22ஆம் தேதி தென் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.