க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய சென்றவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 23 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். கிரேட்டர் நொய்டாவில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ஒரு பெண், மொபைல் செயலியில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட சுமித் சிங், அந்த ஆர்டரை டெலிவரி செய்வதற்காக அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் வீட்டில் அந்த பெண் தனியாக இருப்பதை உணர்ந்து கொண்ட அவர், வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார். அதன் பின், அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
போலீசாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓட்டம் எடுத்த சுமித்
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த சம்பவம் நடந்த அதே நாளில் பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து, குற்றவாளியை பிடிக்க போலீசார் பல குழுக்களை அமைத்தனர். கடைசியாக, கிரேட்டர் நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுமித் சிங் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால், அவரைக் கைது செய்ய ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றபோது, சுமித், கான்ஸ்டபிள் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, சுமித்தை பிடிக்க SWAT குழுக்கள் வரவழைக்கப்பட்டன. போலீஸ் குழுக்கள் அவரை நெருங்கியதும் அவர் துப்பாக்கியால் போலீசாரை சுட தொடங்கினார். போலீசார் திருப்பிச் சுட்டதில் அவரது காலில் காயம்பட்டது. தற்போது, சுமித் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.