கடும் வெள்ளத்திற்கு மத்தியில் டெல்லியில் மீண்டும் கனமழை
ஹரியானாவில் உள்ள ஹத்னி குந்த் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், கனமழையாலும் டெல்லியின் பல பகுதிகளுக்குள் வெள்ள நீர் நுழைந்துள்ள வேளையில், நேற்று டெல்லியில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால், வெள்ள நீரை வெளியேற்ற எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடிஓ மற்றும் ராஜ்காட் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கி இருக்கும் நிலையில், இன்று காலை டெல்லியின் பல இடங்களில் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக, குடிமைப் பணியாளர்கள் இரவு முழுவதும் உழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் இயங்க தொடங்கியது
கனமழைக்கு மத்தியிலும் யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது ஆறுதலான ஒரு விஷயமாகும். நேற்று 207.68 மீட்டராக இருந்த யமுனை நதியின் நீர்மட்டம் தற்போது 206.14 மீட்டராக குறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் யமுனையின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி உயர்ந்தது. இதுவே, டெல்லியில் வெள்ளம் ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகும். 45 ஆண்டு கால சாதனையை(207.49 மீட்டர்) முறியடித்து, யமுனை நதியின் நீர்மட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு 208.66 மீட்டராக உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அதிகம் வெள்ளம் ஏற்பட்டதால் டெல்லியின் மூன்று முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டது. தற்போது, யமுனை நீர்மட்டம் கொஞ்சம் குறைந்திருப்பதால், அதில் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் இயங்க தொடங்கி இருக்கிறது.