டெல்லி பல்கலைக்கழக பகுதி அருகே பயங்கரம்: 5 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து 6 பேர் பலி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், மாணவர்கள் தங்கியிருந்த 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. டெல்லி பல்கலைக்கழகத்தின் தென் பகுதி வளாகம் அருகில் நடைபெற்ற இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் தரைதளம் மற்றும் பேஸ்மென்ட் பகுதியில் தகுந்த பாதுகாப்பின்றி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சுமார் 30 முதல் 40 நபர்கள் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஹாஸ்டல் டேஸ் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த விடுதியில் கேரளா, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் தங்கியிருந்து படித்து வந்தனர்.
ஆய்வு
பிரதமர் இரங்கல் மற்றும் முதல்வர் ஆய்வு
இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
காயமடைந்தவர்கள் எய்ம்ஸ் அதிவிரைவு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு காரணமான கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் உறுதியளித்தார்.
டெல்லி தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), காவல் துறை மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்களுக்கு ஆக்ஸிஜன் உருளைகள் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.