டெல்லி காற்று மாசுபாடு: தொடர்ந்து 6வது நாளாக நச்சுப் புகைமூட்டத்தால் திணறும் தலைநகரம்
டெல்லி காற்றின் தரம் நேற்று கொஞ்சம் மேம்பட்டதை அடுத்து, இன்று காலை அதன் தரம் 'மிகவும் மோசமானது' என்ற நிலையில் இருந்து 'மோசமானது' என்ற நிலைக்கு மாறியது. ஆனால், கடந்த வாரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக அறிமுகமான மும்பையிலும் காற்று மாசுபாடு மோசமடைந்துள்ளது. நச்சுப் புகை மூட்டம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களை சூழ்ந்துள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைப்படை-இரட்டைபடை திட்டத்தை டெல்லி அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஒற்றைப்படை-இரட்டைபடை திட்டம் என்பது ஒற்றைப்படை தேதிகளில் ஒற்றைப்படை எண்களை(பதிவு எண்) கொண்ட வாகனங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்று கூறி டெல்லி அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
மும்பையில் மோசமடையும் காற்று மாசுபாடு
டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு(AQI) இன்று காலை 418 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக்(460), நரேலா(448), பவானா(462), ஆனந்த் விஹார்(452), மற்றும் ரோகினி(451) ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். நொய்டா, குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பிற நகரங்களின் நிலைமையும் மிகவும் மோசமாகியுள்ளது. மும்பையில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு(AQI) இன்று காலை 165ஆக இருந்தது. மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தில், நகரில் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவமனை சிறப்பு தீவிர சுவாச சிகிச்சைப் பிரிவை அமைத்துள்ளது.