கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி
ஜூன் மாதத்தில் 88 ஆண்டுகள் இல்லாத அளவு டெல்லியில் ஒரே நாளில் அதிக மழை நேற்று பதிவாகியது. மேலும், இன்று தொடர்ந்து டெல்லியில் மழை பெய்து வருகிறது.இதனால் டெல்லி நகரமே ஸ்தம்பித்துள்ளது. டெல்லிக்கு பருவமழை வருவதால், அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் ஜூலை 1 வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று 24 மணி நேரத்தில் 228.1 மிமீ மழை பதிவானதால், நகரின் பல பகுதிகள் தொடர்ந்து நீரில் மூழ்கின.
சுரங்கப்பாதையில் மூழ்கி ஒருவர் பலி
மேலும், பல பகுதிகளில் நீடித்த மின்வெட்டு ஏற்பட்டது. டெல்லியில் மழை தொடர்பான விபத்துகளில் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் நேற்று மாலை மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஷாலிமார் பாக் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். இன்று, துவாரகா, பாலம், வசந்த் விஹார், வசந்த் குஞ்ச், குர்கான், ஃபரிதாபாத், மனேசர் உள்ளிட்ட டெல்லி-என்சிஆர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது.