நச்சு புகையால் மூழ்கிய தலைநகரம்; காற்றின் தரக் குறியீடு 500-ஐ எட்டியது!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தலைநகரான டெல்லி, மீண்டும் அடர்த்தியான நச்சு புகைமூட்டத்தால் மூடப்பட்டுள்ளது. இதனால், நகரின் பல பகுதிகளில் காற்றின் தரம் (AQI) அபாயகரமான உச்சத்தை அடைந்து, 'மிக அதீத நச்சுத்தன்மை' கொண்ட மண்டலமாக மாறியுள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 457 என்ற மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. நகரின் முக்கிய கண்காணிப்பு நிலையங்களான வஜிர்பூர், ரோகிணி, அசோக் விஹார் உள்ளிட்ட பகுதிகளில் AQI ஆனது அதிகபட்ச அளவான 500-ஐ தொட்டது. இந்த நிலை 'மிக அதீத பாதிப்பு' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு
பார்வை திறன் பாதிப்பு மற்றும் நடவடிக்கைகள்
இந்த அடர்ந்த புகைமூட்டம் காரணமாக, அதிகாலை நேரங்களில் நகரின் பல பகுதிகளில் பார்வைத் திறன் 50 மீட்டருக்கும் குறைவாக குறைந்தது. இதனால் சாலை போக்குவரத்தும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த, மாசுத் தடுப்பு நடவடிக்கைக்கான தரப்படுத்தப்பட்ட திட்டத்தின் (GRAP) மிகக் கடுமையான நான்காம் நிலை (Stage-IV) உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் பழைய டீசல் வாகனங்களின் போக்குவரத்து ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஹைபிரிட் சுழற்சி முறையில் பள்ளிகளை இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம்
விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லி விமான நிலையத்தில் கடுமையான மூடுபனியால், திங்கட்கிழமை விமான தாமதங்கள் பதிவாகியுள்ளன. அடர்ந்த மூடுபனி மற்றும் புகைமூட்டம் பார்வையை குறைத்ததால், சிறிய தாமதங்கள் ஏற்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பயணிகள் கூடுதல் பயண நேரத்தை ஒதுக்கி, விமான நேர அப்டேட்களை அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தி, ஆலோசனைகளை வழங்கியுள்ளன.