நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை
டெல்லிக்கு இன்று (ஜூலை 3) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாபிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. நேற்று, டெல்லி நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்த போதிலும், டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 36.7 டிகிரி செல்சியஸ் மற்றும் 30.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் ஈரப்பதம் 62 சதவீதமாக இருந்தது. இன்று, டெல்லியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
மேலும், டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. ஐஎம்டியின் தினசரி புல்லட்டின் படி, ஜூலை 5 முதல் 7 வரை கிழக்கு உத்தரபிரதேசத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் ஜூலை 4 முதல் 7 வரை, கிழக்கு ராஜஸ்தானில் ஜூலை 3 முதல் 7 வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
மேற்கு ராஜஸ்தானினில் ஜூலை 3 ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 3 மற்றும் 4ஆம் தேதிகளிலும், சத்தீஸ்கரில் ஜூலை 3-ம் தேதி அன்றும் கனமழை பெய்யக்கூடும். ஜூலை 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் கொங்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவிலும், ஜூலை 3 ஆம் தேதி குஜராத்திலும், ஜூலை 5 மற்றும் 7 க்கு இடையில் கடலோர கர்நாடகாவிலும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 5 மற்றும் 7க்கு இடையில் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.