CISF வீரரின் சினிமா பாணி சேஸிங்! டெல்லி மெட்ரோவில் அரைத்த தங்கத்துடன் சிக்கிய மலேசியா வாழ் நபர்
செய்தி முன்னோட்டம்
டெல்லி ஜமா மசூதி மெட்ரோ ரயில் நிலையத்தில் எக்ஸ்ரே பரிசோதனையின் போது, தனது பையை எடுத்துக்கொண்டு திடீரென தப்பியோட முயன்ற நபரை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (CISF) வீரர் சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட நபரிடமிருந்து சுமார் 155 கிராம் எடையுள்ள சந்தேகத்திற்குரிய தங்கப் பவுடர்/தங்கப் பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேஸிங்
CCTV காட்சிகளும் சினிமா பாணி சேஸிங்கும்
ஞாயிற்றுக்கிழமையன்று முகமது சுஐப் ஆலம் என்ற நபர், மெட்ரோ நிலையத்தின் பாதுகாப்புப் சோதனையின் போது தனது பையை எக்ஸ்ரே ஸ்கேனரில் இருந்து எடுத்தவுடன் திடீரென ஓடத் தொடங்கினார்.
பெண்கள் பரிசோதனை பகுதி வழியாக அவர் தப்பியோடியதைச் சுதாரித்துக் கொண்ட சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர், உடனடியாக அவரைப் பின்தொடர்ந்து ஓடினார்.
தப்பியோடிய நபர் எஸ்கலேட்டரில் ஏறிச் செல்ல, பாதுகாப்புப் படை வீரர் படிக்கட்டுகள் வழியே அதிவேகமாகப் பாய்ந்து சென்று கேட் எண் 1 அருகே அவரை மடக்கிப் பிடித்தார்.
இந்த 27 வினாடி சிசிடிவி காட்சிகளைச் சிஐஎஸ்எஃப் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
CISF’s Swift Response: Suspicious Person Apprehended While Attempting to Escape at Metro Station!
— CISF (@CISFHQrs) October 19, 2026
Alert CISF personnel at Jama Masjid Metro Station of DMRC sprang into action when a passenger attempted to flee after a suspicious, dense object appeared on the XBIS screen during… pic.twitter.com/QTh9AneEdP
பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய பொருள்
மடக்கிப் பிடிக்கப்பட்ட நபரின் பையை ஆய்வு செய்தபோது, அதில் இருந்த உடைகளின் தையல் பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 155 கிராம் எடையுள்ள அரைத்த தங்கப் பவுடர் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் மலேசியாவில் வசித்து வருபவர் என்றும், ஜவுளித்துறையில் பணியாற்றி வரும் அவர் கடந்த அக்டோபர் 16 அன்று டெல்லி வந்தடைந்து ஜமா மசூதி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள் போதைப்பொருள் இல்லை என்பது போதைப்பொருள் தடுப்புத் துறையின் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.
இருப்பினும், அந்தப் பொருளுக்கான உரிய ஆவணங்களையோ அல்லது திருப்திகரமான விளக்கத்தையோ அவரால் அளிக்க முடியவில்லை.
இதையடுத்து டெல்லி காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.