மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்துள்ள நிலையில், உயர் நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. "ஆவணங்களை வழங்குவதில் அரசு தரப்பில் எந்த தாமதமும் இல்லை என்றும், குற்றச்சாட்டு மீதான வாதம் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தின் தரப்பில் எந்த தாமதமும் ஏற்படவில்லை என்றும் இந்த நீதிமன்றம் கருதுகிறது. விசாரணையில் மிகப்பெரிய பதிவு இருப்பது, ED, CBI மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் தவறு அல்ல" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
'ஆதாரங்களை அழிக்க மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை': நீதிமன்றம்
மின்னணு ஆதாரங்களை அழிப்பதில் சிசோடியா ஈடுபட்டுள்ளார் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் சக்திவாய்ந்த தலைவராக இருப்பதால் அவர் செல்வாக்கு மிக்கவர் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அவரை விடுவித்தால் ஆதாரங்களை அவர் அழிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், ஜாமீன் கோருவதற்கு அவரிடம் தகுந்த காரணம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் ஒவ்வொரு வாரமும் அவரது மனைவியைச் சந்திக்க காவலில் உள்ள அவரை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.