LOADING...
ஏர் பியூரிஃபையர் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
ஜிஎஸ்டி வரியை உடனடியாக ஏன் குறைக்கக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

ஏர் பியூரிஃபையர் மீதான ஜிஎஸ்டி-யை குறைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 24, 2025
05:25 pm

செய்தி முன்னோட்டம்

"நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 21,000 முறை சுவாசிக்கிறோம்; நச்சுக்காற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கணக்கிட்டு பாருங்கள்" என்று டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நிலவும் அபாயகரமான காற்று மாசை கருத்தில் கொண்டு, ஏர் பியூரிஃபையர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உடனடியாக ஏன் குறைக்கக்கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசு 'அவசரநிலை' கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏர் பியூரிஃபையர்களை 'ஆடம்பரப் பொருளாக' கருதாமல், ஒரு 'உயிர்காக்கும் மருத்துவக் கருவியாக' வகைப்படுத்தக் கோரி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் அதன் மீதான வரியைக் குறைக்க முடியும் என்பதே மனுதாரரின் கோரிக்கை.

கேள்விகள்

நீதிமன்றத்தின் காரசாரமான கேள்விகள்

தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. "மக்களுக்குச் சுத்தமான காற்றை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதில் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள். அப்படி இருக்கும்போது, மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வாங்கும் கருவிகளுக்காவது வரிவிலக்கு அளிக்க வேண்டாமா?" என அந்த அமர்வு கேள்வி எழுப்பியது. "தற்போது ஏர் பியூரிஃபையர்களுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இவ்வளவு அதிக வரி விதிப்பதால் நடுத்தர மக்கள் இதனை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனை ஏன் 5% ஆகக் குறைக்கக்கூடாது?" எனவும் கேட்டது.

பரிந்துரை

நீதிமன்றத்தின் பரிந்துரை

தற்போது நிலவும் காற்று மாசு சூழலை ஒரு 'தேசிய அவசரநிலையாக' கருதி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஏர் பியூரிஃபையர்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. "நீங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்சம் இதுதான். ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. உங்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், குறைந்தபட்சம் நீங்கள் செய்யக்கூடியது ஜிஎஸ்டியைக் குறைப்பதாகும். தற்காலிகமாக 15 நாட்களுக்கு விலக்கு அளிக்கவும். இந்த சூழ்நிலையை அவசரநிலையாகக் கருதுங்கள். எப்போது நீங்கள் அறிவுறுத்தல்களுடன் திரும்பி வருவீர்கள் என்று இப்போது எங்களிடம் கூறுங்கள்," என்று பெஞ்ச் கூறியது, பார் & பெஞ்ச் மேற்கோள் காட்டியது. ஏர் பியூரிஃயர்களுக்கு தற்போது 18% GST வரி விதிக்கப்படுகின்றன.

Advertisement