டெல்லி காற்று மாசுபாடு: இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் காற்றின் தரம் 'Severe' (மிக மோசம்) பிரிவில் நீடிப்பதால், ஏற்கனவே உள்ள GRAP-4 கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய விதிகளையும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் கட்டாயமாக 50% பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும், மீதமுள்ள 50% பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர வேண்டும், புகைச்சான்றிதழ் இல்லை எனில் எரிபொருள் இல்லை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும். அவை என்ன எனபதை பார்ப்போம்.
கட்டுப்பாடுகள்
வாகனகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
இன்று முதல், முறையான புகைச்சான்றிதழ் (PUC Certificate) இல்லாத வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள எந்த ஒரு பெட்ரோல் பங்க்கிலும் பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி (CNG) வழங்கப்பட மாட்டாது. இதை கண்காணிக்க பெட்ரோல் பங்குகளில் கேமராக்கள் மற்றும் போக்குவரத்து துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லிக்கு வெளியே இருந்து வரும் BS-VI (BS-6) தரம் அல்லாத (அதாவது BS-3 மற்றும் BS-4 ரக) பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் BS-6 ரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
கட்டுமான பணி
கட்டுமான பணிகளுக்கு முழு தடை & இழப்பீடு
டெல்லி முழுவதும் அனைத்து விதமான கட்டுமான மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 10,000 நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
பள்ளி
பள்ளிகள் நிலவரம்
5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில், தற்போது 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 'ஹைப்ரிட்' (நேரடி மற்றும் ஆன்லைன்) முறையில் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடரும். இது தவிர, டெல்லிக்குள் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த (அவசரத் தேவைகள் தவிர) தடையும் நீடிக்கிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் (AQI) 400 முதல் 600 வரை பதிவாகி வருவதால், மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.