டேராடூனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான திரிபுரா மாணவர் உயிரிழப்புக்கு காரணம்: மருத்துவ அறிக்கையில் திடுக் தகவல்
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த 24 வயது திரிபுரா மாணவர் ஏஞ்சல் சக்மா என்பவரின் மருத்துவ அறிக்கை திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அவர் மிகக் கொடூரமான காயங்களுக்கு உள்ளாகியிருந்தது தெரியவந்துள்ளது. கிராஃபிக் எரா மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையின்படி, ஏஞ்சல் சக்மாவின் தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. தாக்குதலின் தீவிரத்தால் அவரது உடலின் வலது பக்கம் (கை மற்றும் கால்) முற்றிலும் செயலிழந்து, பக்கவாதம் ஏற்பட்டது. மூளையில் பிளவுகள் மற்றும் கால் பகுதியில் உராய்வு காயங்கள் இருந்தன.
பின்னணி
சம்பவத்தின் பின்னணி
டிசம்பர் 9 ஆம் தேதி, டேராடூனின் சேலாகுய் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஏஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேல் சக்மாவை அங்கிருந்த போதை ஆசாமிகள் சிலர் இனரீதியாக இழிவாகப் பேசியுள்ளனர். இதனை அவர்கள் எதிர்த்தபோது, அந்த கும்பல் கூர்மையான ஆயுதங்களால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியது. இதில் ஏஞ்சல் சக்மா நிலைகுலைந்து கீழே விழுந்தார். சுமார் 17 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏஞ்சல் சக்மா, சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி உயிரிழந்தார்.
நடவடிக்கை
காவல்துறை நடவடிக்கை மற்றும் கைதுகள்
இந்தக் கொலை தொடர்பாக டேராடூன் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவர் சிறுவர்கள் என்பதால் அவர்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கைதானவர்களில் அவனிஷ் நேகி, சௌர்யா ராஜ்புத், சூரஜ் கவாஸ், சுமித் மற்றும் ஆயுஷ் பரோனி ஆகியோர் அடங்குவர். தப்பியோடிய மற்றொரு குற்றவாளி நேபாளத்திற்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 25,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு
அரசின் கண்டனம்
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த வழக்கு இப்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.