பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா முடிவு
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் இன்று(ஜூலை 13) ஒப்புதல் அளித்துள்ளது. 22 ஒற்றை இருக்கை கொண்ட ரஃபேல் கடல் விமானங்கள் மற்றும் நான்கு இரட்டை இருக்கைகள் கொண்ட பயிற்சியாளர் விமானங்கள் இதில் அடங்கும். மேலும், இந்திய கடற்படைக்காக மூன்று கூடுதல் ஸ்கோபீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா பிரான்ஸிடம் இருந்து வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு சுமார் 90,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்ததை அடுத்து, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்திய கடற்படையில் நிலவி வரும் விமான தட்டுப்பாடு
பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் விமானங்கள் ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய கப்பலைகளில் இந்திய கடற்படையால் பயன்படுத்தப்படும். பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து போர் விமானங்களை இந்தியா வாங்குவது இது இரண்டவது முறையாகும். பாதுகாப்பு அமைச்சர் ராஜன்த் சிங், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த முன்மொழிவுகளுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய கடற்படையில் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால், இந்த புதிய ஒப்பந்தம் இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.