இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை லண்டனில் வைத்து புதன்கிழமை சந்தித்தார். உத்தியோகபூர்வ பயணமாக தற்போது பாதுகாப்பு அமைச்சர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். பதவியில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் அதிகாரபூர்வமாக இங்கிலாந்துக்கு செல்வது 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் முதல்முறையாக நடக்கிறது. முன்னதாக, லண்டனில் உள்ள டிரினிட்டி ஹவுஸில் நடந்த இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்புத் தொழில்துறை தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து நடத்த இருக்கும் கூட்டு இராணுவ பயிற்சிகள்
"லண்டனில் உள்ள டிரினிட்டி ஹவுஸில் நடந்த இந்தியா-இங்கிலாந்து பாதுகாப்பு தொழில்துறை தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேசை மாநாட்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்" என்று பாதுகாப்பு அமைச்சர் அலுவலம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் இந்த பயணத்தின் போது, இங்கிலாந்து மற்றும் இந்தியா தங்களது உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்த உறுதியளித்தன. வரும் ஆண்டுகளில், இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து தங்களது இராணுவங்களுக்கு இடையே மிகவும் சிக்கலான கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றன. இது 2030 இறுதிக்குள் நடத்தப்பட இருக்கும் ஒரு முக்கிய கூட்டுப் பயிற்சியாகும்.