தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று(மார்ச்.,21) வெளியான பட்ஜெட் தாக்கலில் இதற்காக ரூ.7,000கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு காரணமாக சில சலசலப்பு எழுந்தநிலையில், நேற்று(மார்ச்.,21) இதுகுறித்து தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்திருந்தார். இத்திட்டம் குறித்து முதல்வர் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டுநெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அந்த ஆணை வெளியாகும் நிலையில் யார்யாருக்கு, எத்தனைப்பேருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும் என்று கூறியிருந்தார்.
3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்த போலீசார்
இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறவுள்ள மகளிரை அவதூறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட பிரதீப் என்பவரை கும்மிப்பூண்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் தாக்கலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உதவி தொகை அறிவிக்கப்பட்டது. இந்த தொகையானது வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் துவக்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.