தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
தமிழக பொதுதேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.1,000பெண்கள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று(மார்ச்.,21) வெளியான பட்ஜெட் தாக்கலில் இதற்காக ரூ.7,000கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு காரணமாக சில சலசலப்பு எழுந்த நிலையில் தற்போது இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில்அவர், இத்திட்டம் குறித்து முதல்வர் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டுநெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அந்த ஆணை வெளியாகும் நிலையில் யார்யாருக்கு, எத்தனைப்பேருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், ரூ.7,000கோடி நிதிஒதுக்கீடு என்றவுடன் உடனே கணக்கு போடுவதாக கூறியுள்ளார்.
அரசாணை வெளியான பின்னர் ஒவ்வொருவரிடமும் விண்ணப்பம் பெறப்படும்
மேலும் இதுகுறித்து பேசிய அவர், ஒரு புது திட்டத்திற்கு எப்போதுமே தோராயமாக முதலில் ஒரு நிதித்தொகை ஒதுக்கப்படும். பின்னர் கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்யப்படும். எனவே ரூ.7,000கோடியை கணக்கிட்டு இவ்வளவு பேருக்கு தான் தொகை கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அரசாணை வெளியான பின்னர் ஒவ்வருவோரிடமும் விண்ணப்பம் வாங்கி இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தெளிவாக தெரியும். முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்காது. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே அந்த திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள். அதேபோல் நான் எனக்கு இந்த உதவித்தொகையினை கேட்க முடியுமா?, அதுபோல் பெண் தொழில் அதிபர்கள், லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறுவோர் இந்த தொகையினை எதிர்பார்க்கமாட்டார்கள் என்பது எனது கருத்து என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.