'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது' - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று(நவ.,29)ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை(நவ.,30)காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மண்டலமானது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசை நோக்கி நகர துவங்கி தென்கிழக்கு பகுதியிலும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.