பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவர் வீட்டிலேயே சென்று சந்திக்க உள்ளார். என்டிஏ(பாஜக கூட்டணி கட்சிகள்) முதல்வர் ஒருவர், காங்கிரஸ் தலைவரை சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா முதலமைச்சருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி இருப்பதால், இரு மாநிலங்களும் என்னென்ன திட்டங்களில் ஒத்துழைக்கக்கூடும் என்ற ஊகங்கள் அதிகமாக உள்ளன. "முந்தைய ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. மறுசீரமைப்புச் சட்டத்தில் இருந்து எழும் பிரச்சினைகள் குறித்து பல விவாதங்கள் நடந்துள்ளன. இது நமது மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாகத் தீர்க்க வேண்டியது அவசியம்." என்று சந்திரபாபு நாயுடு தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
ஹைதெராபாத்தை பகிர்ந்து கொள்வதற்கான 10 ஆண்டு காலம் முடிவடைகிறது
"இது குறித்து விவாதிக்க, ஜூலை 6 சனிக்கிழமை அன்று பிற்பகல் உங்கள் இடத்தில் வைத்து நாம் சந்திக்கலாம் என்று நான் முன்மொழிகிறேன்." என்று மேலும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். "நேருக்கு நேரான சந்திப்பு இந்த முக்கியமான பிரச்சினைகளில் விரிவான தீர்வை வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் இது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு பரஸ்பர நன்மை பயக்கும். இதன் மூலம் தீர்வுகளை அடைவதற்கு திறம்பட ஒத்துழைக்க முடியும்" என்று அவரது கடிதம் மேலும் கூறியுள்ளது. இரண்டு மாநிலத்திற்கும் பொது தலைநகராக உள்ள ஹைதெராபாத்தை பகிர்ந்து கொள்வதற்கான 10 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில், இரு மாநில முதல்வர்களும் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா இன்னும் மாநிலத் தலைநகரைக் கட்டமைக்கவில்லை.