உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. கடந்த 12ஆம் தேதி, சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், அங்கு பணியாற்றி வந்த 40 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை நம்பிக்கையுடன் வைத்திருக்க மீட்பு குழுவினர் தொடர்ந்து அவர்களுடன் பேசிவருகின்றனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நார்வே, தாய்லாந்து குழுக்கள்
கடந்த 2018 ஆம் ஆண்டு, தாய்லாந்து குகையில் சிக்கிய குழந்தைகளை மீட்ட மீட்பு குழுவினர் மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த சிறப்பு மீட்பு குழுவினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். 'அமெரிக்கன் ஆகர்' என்ற இயந்திரம் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படுவது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த இயந்திரம் இடிபாடுகளை விரைவாக அகற்றி, சிக்கியுள்ள தொழிலாளர்களை விரைவில் மீட்க உதவும் என நம்பப்படுகிறது. இடிபாடுகள் வழியாக 'அமெரிக்கன் ஆகர்' இயந்திரத்தை பயன்படுத்தி, பாதை அமைத்து, அதில் 600-800mm சுற்றளவிலான லேசான எஃகு குழாய்கள் ஒவ்வொன்றாக பொருத்தப்படும். பின்னர், இது வழியாக சிக்கி உள்ள தொழிலாளர்கள், தவழ்ந்து வெளியேற முடியும்.
மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்ன?
இமய மலைப் பகுதிகளில் பெரும்பாலும் மென்மையான பாறைகள் அமைந்துள்ளன. சிறு சிறு பாகங்களாகவே கடினமான பாறைகள் அமைந்துள்ளன. மென்மையான பாறைகள் எளிதில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என்பதால், மீட்பு பணி கடினமானதாகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் இந்த சுரங்கப்பாதை, பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இந்து புனிதத் தலங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும், தேசிய உள்கட்டமைப்பு முயற்சியான 'சார் தாம்' திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.