நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள்
செய்தி முன்னோட்டம்
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலில் மாநில அளவில் அன்னபூரணி என்ற மாணவி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
சிவங்கை மாவட்டம் உலகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டங்காடு என்ற பகுதியில் வசித்து வரும் அன்னபூரணியின்(18) தந்தை முருகன்(45) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
அவரது தாய் சித்ரா(40) இல்லத்தரசியாக இருக்கிறார்.
சிறுவயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த அன்னபூரணி, உலகம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் தன் பள்ளி படிப்பை முடித்தார்.
12ஆம் வகுப்பில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்த அன்னபூரணிக்கு, மாவட்ட நிர்வாகம் துணை நின்று நீட் பயிற்சி பெற உதவியது.
சஜசஜ்
நீட் தேர்வில் 720க்கு 538 மதிப்பெண்கள் பெற்ற அன்னபூரணி
சிவங்கை மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டில் சிறந்த நீட் பயிற்சி மையத்தில் அன்னபூரணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர் நீட் தேர்வில் கலந்து கொண்டு 720க்கு 538 மதிப்பெண்கள் பெற்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களின் பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அரசு பள்ளியில் படித்தும் சாதனை படைக்கலாம் என்று நிரூபித்திருக்கும் அன்னபூரணி, "மருத்துவராகி உலகம்பட்டிக்கு சேவை செய்வதே எனது கடமை" என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நீட்-தேர்வு முடிவுகளில் தேசிய அளவிலும் ஒரு தமிழக மாணவர் தான் முதலிடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மகனான ஜே.பிரபஞ்சன் நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பெற்றார்.