
தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
செய்தி முன்னோட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களை வேறுபாட்டுடன் நடத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தை சேர்ந்த வேங்கைவயல் என்ற கிராமத்தில் மக்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் மனித கழிவுகள் கலந்திருப்பதாக ஒரு புகார் எழுந்தது.
இதைக் குடித்த குழந்தைகள் சிலர் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதை நேரில் சென்று பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சின்னதுரை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
வேங்கைவயல் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சியர் கவிதா ராமு மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே ஆகியோர் இதை விசாரிக்க நேரில் சென்றிருந்தனர்.
குடிநீர் பாதிப்பு
உடலாலும் மனதாலும் சிரமப்படும் பட்டியலின மக்கள்!
இந்த விசாரணையின் போது, அங்கு வசிக்கும் பட்டியலின மக்கள் அய்யனார் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் தேநீர் கடைகளில் தனிக்குவளை வழங்கப்படுகிறது என்பதும் தெரியவந்தது.
இதை கேள்விப்பட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை அழைத்துக்கொண்டு அய்யனார் கோவிலுக்குள் சென்றார்.
கோவிலுக்குள் எல்லோரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.
இது பிடிக்காத சிங்கம்மாள்(35) என்ற பெண், தனக்கு அருள் வந்ததைப் போல் பாவித்து பட்டியலின மக்களைத் தவறாக பேசினார்.
இதையடுத்து, சிங்கம்மாளைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், பட்டியலின மக்களுக்கு தனி கோப்பைகள் வைத்து தேநீர் வியாபாரம் செய்துகொண்டிருந்த தேநீர் கடையின் உரிமையாளர் மூக்கையா(57) என்பவரும் கைது செய்யப்பட்டார்.