திமுக நிகழ்ச்சிகளில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை - அமைப்பு செயலாளர் அறிவிப்பு
திமுக கழக தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் கழக நிர்வாகிகள், தோழர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு பேனர் மற்றும் கட்-அவுட் காரணமாக சென்னையிலும், கோவையிலும் இருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. அப்போவே திமுக நிகழ்ச்சிகளில் இது போன்ற பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுத்தியதாகவும், மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியிருந்தார்.
கழக தலைவர் ஒப்புதலுடன் அறிக்கை வெளியீடு
ஆனால் சமீப காலமாக பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்படுவதாக கழகத்திற்கு தகவல் வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் திமுக கழக செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் முன்னர் கூறியது போல் கழக தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், கழக முன்னோடிகள் வரும் நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது. பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் 1 அல்லது 2 பேனர்கள் விளம்பரத்திற்காக வைக்கலாம். ஆனால் அதற்கும் உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பான முறையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதனை கழக தலைவரின் ஒப்புதலோடு அறிவிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.