NEET PG 2025: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆகலாம்? அதிரடியாகக் குறைக்கப்பட்ட கட்-ஆஃப்!
செய்தி முன்னோட்டம்
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MD/MS) நீட் தேர்வில் (NEET-PG 2025), இடஒதுக்கீடு பிரிவினருக்கான தகுதி சதவீதத்தைப் 'பூஜ்யம்' (Zero Percentile) என மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது. இதன் மூலம், 800 மதிப்பெண்களுக்கு மைனஸ் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட, தற்போது நடைபெற்று வரும் மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவ இடங்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (NBEMS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுப் பிரிவினருக்கான தகுதி சதவீதம் 50-லிருந்து 7-ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 45-லிருந்து 5-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இது பூஜ்யமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
எதற்காக இந்த முடிவு?
முதல் இரண்டு கட்ட கலந்தாய்வுகளுக்கு பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முடிவிற்கு மருத்துவ சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தகுதி மதிப்பெண்ணை இவ்வளவு தூரம் குறைப்பது மருத்துவக் கல்வியின் தரத்தைப் பாதிக்கும் என்றும், இது தகுதியுள்ள மாணவர்களை விடத் தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதற்கே வழிவகுக்கும் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2023-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு முடிவை மத்திய அரசு எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூடுதலாக 135 இடங்கள் சேர்க்கப்பட்டு, மொத்த முதுநிலை இடங்களின் எண்ணிக்கை 32,215 ஆக உயர்ந்துள்ள நிலையில், தகுதி வரம்பு குறைப்பு குறித்த விவாதம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது.