நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம்
இரு தினங்களுக்கு முன்னர், நாடாளுமன்றத்திற்குள் மஞ்சள் புகைக் குப்பிகளை வீசிய இருவர்- சாகர் ஷர்மா மற்றும் டி மனோரஞ்சன்- கைது செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்திற்குள் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் அம்பலமானது. அவர்களையும், அவர்களுடன் கூட்டு சேர்ந்து கலகம் ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்த தூண்டிய மற்றவர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்திய நாடாளுமன்றத்தில், அத்தனை பாதுகாப்பு கவசங்களையும் தாண்டி, அவர்கள் எப்படி மஞ்சள் புகைக் குப்பிகளை உள்ளே எடுத்து வந்தனர் என, NDTV செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பயனாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஷூக்கள்
கலகக்காரர்கள் அணிந்து வந்த ஷூ தனிப்பயணக்கப்பட்டவை என காவல்துறை கண்டுபிடித்துள்ளது. அவர்களின் இடது காலில் அணிந்திருந்த ஷூக்களின், (ஸ்னீக்கர்கஸ்) இடது அடிப்பகுதியை வெட்டி, அதனுள், புகை டப்பாவை மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக, இரண்டடுக்கு ரப்பர் ஸ்லிப் கீழே ஒட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை FIR -இல் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த ஷூக்களை, சாகர் ஷர்மா தனது சொந்த நகரமான லக்னோவில் ஆர்டர் செய்துள்ளார். ஷர்மா, மனோரஞ்சன் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே கேன்களை வீசிய இருவர், நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே இவர்கள் நால்வரின் காலணிகளை தயாரித்த கடையை அடையாளம் காண, லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று டெல்லி போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள்
ஷர்மா மற்றும் மனோரஞ்சன் பயன்படுத்திய டப்பாக்களையும், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அதில் ஆதார் அட்டைகளும் அடங்கும். அதோடு, பாதி கிழிந்த இரண்டு துண்டு பிரசுரங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ஒன்றில், 'ஜெய் ஹிந்த்' ஆங்கிலத்தில் வாசகமிட்டு, மூடிய முஷ்டியின் படம் இருந்ததாகவும், இரண்டாவது பிரசுரத்தில் மணிப்பூரில் இன வன்முறை பற்றிய ஆங்கில முழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஷர்மாவும், மனோரஞ்சனும் இந்த துண்டுப்பிரசுரங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க விரும்பியதாகவும் விசாரணையில் இருவரும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பிரசுரத்தில் பிரதமரை "காணாமல் போனவர்" என்றும், கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஸ்விஸ் வங்கியின் பண வெகுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.