மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மதுரையில் அமைந்துள்ள யாதவா கல்லூரியில் நேற்று(பிப்.,27) மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான எஸ்.சுதாகர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றுகூறி அவர் பேசியுள்ளார். அப்போது அவர், கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் CSIR-ஆல் நடத்தப்படும் கல்வி உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதுவதில்லை. இந்த உதவி தொகையானது மாணவர்கள் தங்களது ஆராய்ச்சிகளை முடிக்கும் வரை வழங்கப்பட கூடியது என்று அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றிபெற பொறியியல் அல்லது தொழில்சார்ந்த துறைகளில் சேர்ந்து படிக்கவேண்டிய அவசியமில்லை. அடிப்படையான அறிவியல் சார்ந்த பட்டபடிப்பினை படித்தாலே போதும் என்று கூறியுள்ளார்.
அடிப்படை அறிவியலில் கணினி தேவைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்
தொடர்ந்து பேசிய அவர், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நடத்தப்படும் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒவ்வொரு கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும். மாணவர்கள் தொழில்துறை தேவைகள் குறித்தும், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவரையடுத்து மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியல் துறை தலைவர் எஸ்.முருகேசன் வேதியியல் துறையில் தொழில் மற்றும் ஆராய்ச்சி குறித்து பேசினார். அவரை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் ரவியா ஷபானா பர்வீன் அடிப்படை அறிவியலில் கணினி தேவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.