பூஸ்டர் டோஸாக 'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு 15 நாட்களில் அனுமதி - சீரம் இந்தியா நிறுவனம் தகவல்
மகாராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சீரம் இந்தியா நிறுவனம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது 'கோவோவாக்ஸ்' என்னும் தடுப்பூசியையும் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனேவாலா புனேவில் உள்ள வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் இவருக்கு டாக்டர் பதங்ராவ் கதாம் நினைவு விருதை என்பிசி கட்சித் தலைவர் சரத் பவார், மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வழங்கினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த 10-15 நாட்களில் 'கோவோவாக்ஸ்' தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
'கோவிஷீல்டு' தடுப்பூசியை விட ஒமிக்ரானை எதிர்த்து 'கோவோவாக்ஸ்' பூஸ்டர் சிறப்பாக செயல்படும்
தொடர்ந்து பேசிய அவர், உலக நாடுகள் நம்மை உற்று கவனித்து வருகிறது. சுகாதராரத்துறையில் நம் செயல்பாடுகள் மட்டுமின்றி, மக்கள் தொகை மிக அதிகம் கொண்ட நம் நாடு கொரோனா காலத்தில் மக்கள் நலனை சிறப்பாக கையாண்டது. அதுமட்டுமல்லாமல் 80 நாடுகளுக்கு உதவி செய்து உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 'கோவோவாக்ஸ்' தடுப்பூசியை 'பூஸ்டர் டோஸாக' போட இன்னும் 10-15 நாட்களில் அனுமதி கிடைத்து விடும் என்றும், இந்த பூஸ்டர் தடுப்பூசி 'கோவிஷீல்டு' தடுப்பூசியை விட ஒமிக்ரானுக்கு எதிராக மிக சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.