Page Loader
இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 
காம்பியாவில் 66 குழந்தைகளும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் இந்திய இருமல் மருந்தை குடித்ததால் உயிரிழந்தனர்.

இருமல் மருந்து பரிசோதனைகள் ஜூன் 1 முதல் அரசு ஆய்வகங்களில் தொடங்குகிறது 

எழுதியவர் Sindhuja SM
May 23, 2023
12:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து, இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் ஏற்றுமதிக்கான அனுமதியைப் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "ஜூன் 1, 2023 முதல், இருமல் மருந்துகளின் ஏற்றுமதி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, ஏதேனும் அரசு ஆய்வகத்தால் பகுப்பாய்வுச் சான்றிதழ் வழங்கப்பட்டால் மட்டுமே, இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும்." என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம்(DGFT) நேற்று ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, காம்பியாவில் 66 குழந்தைகளும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் இந்திய இருமல் மருந்தை குடித்ததால் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

details

இருமல் மருந்துகளின் தரத்தை சோதனை செய்ய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது

இந்திய மருந்தியல் ஆணையம், பிராந்திய மருந்து சோதனை ஆய்வகம் (RDTL - சண்டிகர்), மத்திய மருந்து ஆய்வுக்கூடம் (CDL - கொல்கத்தா), மத்திய மருந்து சோதனை ஆய்வகம் (CDTL - சென்னை ஹைதராபாத், மும்பை), RDTL (குவஹாத்தி)] மற்றும் NABL(பரிசோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம்) ஆகிய மத்திய அரசின் ஆய்வகங்களிலும், மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற மருந்து பரிசோதனை ஆய்வகங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு மருந்துப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரத்தை சோதனை செய்ய மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.