கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் தொடக்கம்-விமான நிலைய இயக்குனர் துவக்கி வைத்தார்
மீண்டும் தற்போது உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎப்7 வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை மேற்கொள்ளவும் பரிசோதனை நிலையத்தை கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் துவக்கி வைத்தார். அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தெர்மல் ஸ்கேன் முறை செய்யப்பட்டுள்ளது, பயணிகளுக்கு நோய் தொற்று இருந்தால் 14 நாட்கள் கண்காணிக்கப்படும். விமான நிலையம் முழுவதும் அடிக்கடி கிருமி நாசினி அடிக்கப்படும். விமான நிலையத்திலேயே தனிமை படுத்தப்படும் அறை தயார் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமனம்
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கான அறையும் தயார் நிலையில் உள்ளது. கோவை விமான நிலையத்தில் மொத்தம் 22 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதில் வரும் பயணிகளை கண்காணிக்கவும், அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும் சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கு இரு முறை தடுப்பூசி போட்ட ஆவணங்கள் உறுதி செய்த பின்னரே பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளோடு வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்டிபிசி-யால் பரிசோதிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.