ரயில்களில் டிக்கெட் இன்றி போலீசார் பயணம் செய்தால் சஸ்பெண்ட் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
தமிழ்நாடு மாநில விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில் போலீசார் உரிய ஆவணமின்றி டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் வழக்கம் தொடர்ந்து நடந்து வருவதாக குற்றச்சாட்டு வெகு நாட்களாக முன்னெடுத்து வைக்கப்பட்டு வருகிறது. போலீசார் தங்கள் சொந்த காரணங்களுக்காக ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் டிக்கெட் எடுக்காமல், உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தங்கள் அடையாள அட்டையினை மட்டுமே காண்பிப்பதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தெற்கு ரயில்வே, ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போலீசார் மீது தக்க நடவடிக்கையினை எடுக்கும்படி டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு முன்னதாக ஓர் கடிதம் எழுதியுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மாவட்ட எஸ்.பி.க்கள், மற்றும் கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை
அந்த கடிதத்தின் அடிப்படையில் தற்போது டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் ஓர் சுற்றறிக்கையினை மாவட்ட எஸ்.பி.க்கள், மற்றும் கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் அவர், தெற்கு ரயில்வே, நுண்ணறிவு மற்றும் உளவுப்பிரிவு காவல்துறை மூலம் ரயில்களில் போலீசார் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பதாக கூறப்பட்டால், அது குறித்து விசாரணை நடத்தி, தகவலை தலைமை அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட போலீசார் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இது குறித்து தெற்கு ரயில்வே எழுதிய புகார் கடிதத்தில், விதிமுறைகள் படி ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.