
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோத ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை கைது செய்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டத்திற்குப் பிறகு, சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அமலாக்கத்துறை நாடு முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, வீரேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 31 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, அமலாக்கத்துறை ₹12 கோடி ரொக்கம், ₹1 கோடி வெளிநாட்டு நாணயங்கள், சுமார் ₹6 கோடி மதிப்பிலான தங்க நகைகள், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் நான்கு சொகுசு கார்கள் என மொத்தம் ₹18 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது.
முடக்கம்
வங்கி கணக்குகள் முடக்கம்
கூடுதலாக, 17 வங்கி கணக்குகள் மற்றும் இரண்டு வங்கி லாக்கர்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. சித்ரதுர்கா எம்எல்ஏவான வீரேந்திரா, கிங்567 மற்றும் ராஜா567 போன்ற பெயர்களில் பல சூதாட்ட தளங்களை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது சகோதரர் கே.சி.நாகராஜ் மற்றும் அவரது மகன் ப்ருத்வி என்.ராஜ் ஆகியோரின் வீடுகளிலிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், வீரேந்திராவின் மற்றொரு சகோதரர் கே.சி.திப்பசாமி, துபாயைத் தளமாகக் கொண்ட மூன்று நிறுவனங்களை நடத்தி வந்ததும், அவை சூதாட்ட நெட்வொர்க்குடன் தொடர்புடையவை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வீரேந்திரா, அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சிக்கிமில் ஒரு கேசினோ அமைப்பதற்காக நிலம் வாங்குவது குறித்து பேசியதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.