ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக முன்னிலை; பின்னடைவை சந்தித்த முக்கிய அமைச்சர்கள் யார்?
சட்டமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு, தெலுங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரமில் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மிசோரம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணி தொடங்கியது. இதில், தெலுங்கானா மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. எனினும், இம்மாநிலங்களில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தான் போட்டியிட்ட டாடியா தொகுதியில் மூன்றாவது சுற்று நிலவரப்படி பின்தங்கியுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர பாரதியை விட 2,950 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அறுதிபெரும்பான்மை பெற்றுள்ள ஆளும் பாஜக
தற்போதைய எண்ணிக்கை நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் அறுதிபெரும்பான்மையுடன் 162 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஆட்சியைத் தக்கவைத்து கொள்ளும் நிலையில் உள்ளது, பாஜக. மறுபுறம் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ராஜஸ்தானிலும் 115 இடங்களில், தற்போதைய எதிர்க்கட்சியான பாஜக முன்னிலை வகிக்கிறது. அதேபோல சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. கருத்துக்கணிப்புகள் படி, சத்தீஸ்கரும், தெலங்கானாவும் காங்கிரஸுக்குதான் என்று ஆருடம் கூறப்பட்ட நிலையில், சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கவுள்ளது பாஜக. மறுபுறம், தெலுங்கானா மாவட்டத்தில், 64 இடங்களில் முன்னிலை வகிக்கிறது காங்கிரஸ், ஆனால், ஒற்றை இலக்க எண்ணில் கடும்பின்னடைவை சந்தித்து வருகிறது பாஜக.