மணிப்பூர் விவகாரம் : அமெரிக்க தூதரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வியாழனன்று (ஜூலை 6), வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான அமைதி முயற்சிகளில் மத்திய அரசுக்கு உதவி செய்யத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இது மூலோபாய கவலைகள் பற்றியது என்று நான் நினைக்கவில்லை. இது மனிதநேயம் பற்றியது.
இதுபோன்ற வன்முறையில் குழந்தைகள் அல்லது தனிநபர்கள் இறக்கும் போது கவலைப்பட நீங்கள் ஒரு இந்தியராக இருக்க வேண்டியதில்லை." என்று கூறினார்.
மேலும், மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று தெரிவித்த எரிக் கார்செட்டி, தேவைப்பட்டால் எந்தவகையிலும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
congress manish tiwari opposes
அமெரிக்க தூதரின் கருத்துக்கு காங்கிரஸ் பதில்
அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் அறிக்கைக்கு கடுமையாக பதிலளித்த காங்கிரஸ், இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கத் தூதர் இத்தகைய அறிக்கையை வெளியிடுவது மிகவும் அரிது என்றும், அத்தகைய தலையிடலை நாடு ஒருபோதும் பாராட்டாது என்றும் கூறியுள்ளது.
"பொது வாழ்வில் குறைந்தது 40 ஆண்டுகளாக இருந்த எனது நினைவின்படி, இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து ஒரு அமெரிக்க தூதர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதை நான் கேள்விப்பட்டதே இல்லை" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறினார்.
அவர் மேலும், "நாங்கள் பஞ்சாப், ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு பகுதிகளில் பல காலமாக சவால்களை எதிர்கொண்டு, சாதுரியம் மற்றும் விவேகத்துடன் முறியடித்தோம்".
"புதிய அமெரிக்க தூதர் இந்திய-அமெரிக்க உறவு குறித்த உணர்திறனை அறிந்துள்ளாரா என்று சந்தேகிக்கிறேன்." என கூறியுள்ளார்.