காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை: கோவையில் பரபரப்பு
கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை அதே பள்ளியில் பயிலும் ஒரு இஸ்லாமிய மாணவியை வகுப்பறையில் வைத்து இழிவுபடுத்தி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துடியலூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் ஒரு இஸ்லாமிய மாணவியிடம், அபிநயா என்ற ஆசிரியை கடுமையாக நடந்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து அந்த மாணவி தனது பெற்றோரின் உதவியுடன், பள்ளி தலைமை ஆசிரியரான ராஜேஸ்வரியிடம் புகார் அளித்தார். தன் மீது புகார் அளிக்கப்பட்டதை அறிந்து கொண்ட ஆசிரியை அபிநயா, வகுப்பறையில் வைத்து அந்த இஸ்லாமிய மாணவியிடம் உன் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறார்.
"மாட்டுக்கறி சாப்பிடுவியா" என்று கூறி மாணவியை தாக்கிய ஆசிரியை
அதற்கு அந்த மாணவி தனது தந்தை மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். அதை கேட்ட ஆசிரியை அபிநயா, "மாட்டுக்கறி சாப்பிட்ட திமிருடன் ஆடுறியாடி" என்று கூறி அந்த மாணவியை தாக்கியதுடன், தனது காலணியை துடைக்க வைத்து இஸ்லாமிய மாணவியை இழுவுபடுத்தி இருக்கிறார். அதனை தொடர்ந்து, அந்த இஸ்லாமிய மாணவியின் பெற்றோர் இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த்ததாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரை பெற்ற காவல்துறையினர் அறிவுரை வழங்கி மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அதன் பிறகும் அந்த மாணவிக்கு தொடர்ந்து மிரட்டல் வந்ததால், மாணவியின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.