கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர்
கோவை மாவட்டம், கரும்பு கடையை அடுத்த சாரமேடு என்னும் பகுதியில் வசித்து வருபவர் முஸ்தபா. கூலித்தொழில் செய்யும் இவரது மனைவியின் பெயர் ரபியா. இவர்களது குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். கரும்பு கடையில் ஓர் சொந்த வீடு உள்ளது. வீட்டின் டிசம்பர் மாத மின்கட்டண அளவீடு எடுக்க அதிகாரிகள் வந்து, அளவினை குறித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். பின்னர், முஸ்தபாவின் எண்ணிற்கு மின்கட்டண தொகை ரூ.70 ஆயிரம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவன், மனைவி இருவரும் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர். மாதா மாதம் ரூ.200ல் இருந்து 300வரை தான் மின்கட்டணம் வரும், ஆனால் கடந்த மாதம் ரூ.1200 வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'ரூ.70,000 கட்ட வேண்டாம், ரூ.30,000 வாராவாரம் கட்டினால் போதும்' என கூறிய மின்வாரிய அதிகாரிகள்
அதற்கு மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், 'நீங்கள் 70 ஆயிரம் செலுத்த வேண்டாம். வெறும் 30 ஆயிரம் செலுத்துங்கள். அதுவும் வாரம் 6 ஆயிரம் என்று தவணைமுறையில் கட்டினால் போதும்" என்று கூறியுள்ளார்கள். இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து முஸ்தபாவும் அவரது மனைவியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார்மனு அளித்துள்ளார்கள். இந்த விவகாரம் குறித்து ரபியா கூறுகையில், "ஒரு வீட்டிற்கு எப்படி இவ்வளவு அதிகதொகை மின்கட்டணமாக வரும்? எங்களால் இவ்வளவு பெரியதொகையை செலுத்த முடியாது" என்று கூறியுள்ளார். மேலும், இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரியத்தில் புகார் அளித்தால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.