கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; பசுமைப் புரட்சியின் நாயகனுக்குத் தமிழக அரசு கௌரவம்
செய்தி முன்னோட்டம்
கோவை மாநகரின் முக்கிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்கு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சி.சுப்ரமணியம், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர். மத்திய அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் இந்தியாவின் உணவுப் பஞ்சத்தைப் போக்க அவர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்காக அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. கோவையைச் சேர்ந்த ஒரு மாபெரும் தலைவரின் சேவையைப் போற்றும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேம்பாலம்
உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் சிறப்பு
கோவையில் உக்கடம்-ஆத்துப்பாலம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உக்கடம் பேருந்து நிலையம், மீன் மார்க்கெட் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இது ஒரு நிரந்தர தீர்வாக அமையும். இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படத் தயாராக உள்ளது. சி.சுப்ரமணியம் பெயரை இந்தப் பாலத்திற்குச் சூட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், குறிப்பாக தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக அரசு கோவை மாவட்டத்தின் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதன் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயர் வைத்ததும் குறிப்பிடத்தக்கது.