LOADING...
'சாகும் வரை சிறை!' கோவை மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் தண்டனை & பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு

'சாகும் வரை சிறை!' கோவை மாணவி வழக்கில் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் தண்டனை & பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 07, 2026
06:28 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் கல்லூரி மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் இன்று (மார்ச் 7) அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் மிகக்குறுகிய காலத்தில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி (30), காளீஸ்வரன் (21) மற்றும் இவர்களின் உறவினரான மதுரையைச் சேர்ந்த தவசி (20) ஆகிய மூவருமே குற்றவாளிகள் என நீதிபதி சுந்தர்ராஜன் அறிவித்தார். கூட்டு பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் மூவருக்கும் வாழ்நாள் முழுவதும் (சாகும் வரை) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு

இழப்பீடு வழங்க உத்தரவு

குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியதோடு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின்படி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் நண்பருக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விரைவான விசாரணை

வேகமான விசாரணை மற்றும் தீர்ப்பு

இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, 250 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையின் துரிதமான நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தின் வேகமான விசாரணையால் நான்கு மாதங்களுக்குள் இந்த வழக்கின் தீர்ப்பு எட்டப்பட்டுள்ளதாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement