மனைவியைக் கொன்று, சடலத்துடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்ட கணவன்; கோவையில் பகீர்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவமாக, கோவையில் பிரிந்து வாழ்ந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவன், அவரது சடலத்துடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றம் செய்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த பி.ஸ்ரீபிரியா (30) என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளியான கணவர் எஸ்.பாலமுருகன் (32) கைது செய்யப்பட்டார். இச்சம்பவம், ஸ்ரீபிரியா தங்கியிருந்த கோவையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) நிகழ்ந்துள்ளது. ஸ்ரீபிரியா மற்றும் பாலமுருகன் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
துரோகத்தின் சம்பளம் மரணம் என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்
மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல பாலமுருகன் கோவை சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்ரீபிரியாவை சரமாரியாகத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மிகவும் கொடூரமான விஷயமாக, கொலை செய்த பிறகு, பாலமுருகன் மனைவி ஸ்ரீபிரியாவின் சடலத்திற்கு அருகில் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அத்துடன், "துரோகத்தின் சம்பளம் மரணம்" என்ற வாசகத்துடன் அந்தப் படத்தைத் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருந்ததாகச் சந்தேகித்ததாலேயே இந்தக் கொலையைச் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.